இட்லி


இட்லி உலகப் பிரசித்தி பெற்ற தென்னிந்திய இட்லி தேவையான பொருள்கள்: உளுத்தம் பருப்பு அரை ஆழாக்கு புழுங்கல் அரிசி ஒன்றரை ஆழாக்கு
செய்முறை: உளுத்தம் பருப்பு, புழுங்கல் அரிசி ஆகிய இந்த இரண்டையும் தனித்தனியே ஊற வைத்து அதில் இருந்து கல்லை களைந்து எடுத்துக் கொள்ளவும். சுமார் மூன்றரை மணி நேரம் நன்கு ஊறிய பின்பு, இரண்டையும் நன்றாக களைந்து கொள்ளவும். முதலில் அரிசியைப் போட்டு அதிகம் தண்ணீர் விடாமல் சிறிது நறநறவென்று அரைத்து எடுத்துக் கொண்டு, பிற்பாடு உளுத்தம் பருப்பைப் போட்டு வெண்ணை போல மைய அரைத்துக் கொண்டு இரண்டையும் கலந்து அவரவர் தேவைக்கு ஏற்ப கல் உப்பு அல்லது பொடி உப்பு சேர்த்து நன்கு கரைத்து மூடி வைக்கவும்.
அடுத்த நாள் இட்லிப் பாத்திரத்தில் நடு விரல் முதல் ரேகை அளவு நீர் விட்டு, இட்லித் தட்டில் மெல்லிய ஈரத் துணியை கட்டி அதன் மீது வைக்கவும். நீர் கொதிக்கும் சமயத்தில் மாவை நன்றாக கலக்கி ஒரு குழிக்கு ஒரு கரண்டி வீதம் எல்லாவற்றிலும் வார்த்து மூடி வைக்கவும். காஸ் அடுப்பாக இருந்தால் மீடியம் பிளேமில் அதிகபட்சம் 15 நிமிடங்கள் ஆன மாத்திரத்தில் வெந்து விடும். அடுப்பு flame ஐ அதிகம் வைக்கவேண்டாம். மீடியம் ஆக வைத்தாலே போதும். 15 நிமிடங்கள் ஆன மாத்திரத்தில் மூடியை அகற்றி ஒரு குச்சி அல்லது ஸ்பூனின் பின் பக்கத்தை நீரில் நனைத்து இட்லிக்குள் விட்டு எடுத்தால் மாவு ஒட்டாமல் வரும். மேற்கண்ட இந்தப் பதத்தில் இருக்கும் சமயத்தில் இட்லித் தட்டை எடுத்து சிறிது நீர் தெளித்து, கவிழ்த்துத் தட்டினால் எல்லா இட்லிகளும் வந்து விடும். இல்லையேல் ஸ்பூன் கொண்டு இட்லியை மெல்ல எடுத்தாலும் சரி. பிறகு அடுத்த செட் மாவையும் இதே போல வார்த்து எடுக்கவும். பின்குறிப்பு : இட்லித் தட்டை குக்கரில் வைத்தும் கூட இட்லியை வேக வைக்கலாம். நடு விரல் முதல் ரேகை அளவுக்கு குக்கரில் தண்ணீரை ஊற்றவும். ஆனால் குக்கருக்கு வெயிட் போடக் கூடாது. அதே போல இட்லித் தட்டை மட்டும் தான் குக்கரில் வைக்க வேண்டும் கூடுதலாக வேறு எந்த குக்கர் தட்டும் வைக்கக் கூடாது. அப்படி ஊற்றும் போது கடைசி தட்டில் இட்லி மாவை ஊற்றுவதை தவிர்க்கவும். இல்லையேல், மாவு தண்ணீரில் வீண் ஆகலாம். உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

Comments