சேமியா கேசரி


 அனைத்து வயதினருக்கும் ஏற்ற சேமியா கேசரி
தேவையான பொருள்கள்: சேமியா 400 கிராம் சர்க்கரை 2 ஆழாக்கு நெய் 6 கரண்டி முந்திரி 20 திராட்சை 20 ஏலக்காய் தேவையான அளவு கேசரி பவுடர் கால் ஸ்பூன் செய்முறை: அடுப்பை லேசாக வைத்துக் கொள்ளவும். ஒரு கனமான வாணலியை எடுத்துக் கொண்டு ஒரு கரண்டி நெய்யைக் காய வைத்து அதில் சேமியாவை தீய விடாமல் அத்துடன் அடிப் பிடிக்காமல் பக்குவமாக வறுக்கவும். (இப்போது எல்லாம் ரெடி மேடாகவே வறுத்த சேமியா கடைகளில் கிடைக்கிறது) நன்கு வறுத்த சேமியாவில் நான்கு டம்பளர் கொதிக்கும் நீரையும் உடன் கேசரிப் பவுடரையும் சேர்க்கவும். இப்போது தீயை அதிகப்படுத்தி தண்ணீர் நன்றாக சுண்டி சேமியா நன்கு வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். சேமியா வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து, அந்த சர்க்கரை நன்கு எல்லா இடமும் பரவிக் கலக்கும் வரையில் மீண்டும் கிண்டிக் கிளறவும். (ஒருவேளை சேமியா நன்கு வேகாமல் சர்க்கரையை சேர்த்தால் சேமியா கடைசி வரையில் வேகாமல் விறைத்துக் கொண்டு நிற்கும். அத்துடன் பதார்த்தமும் கெட்டுவிடும். இது நினைவில் இருக்கட்டும்) அப்படியாகக் கிளறும் சமயத்தில் உடன் நான்கு கரண்டி நெய்யை ஊற்றவும். நன்கு அடிப்பிடிக்காமல் கிளறுவதில் தான் சேமியா கேசரியின் சுவை இருக்கும். நன்கு கிண்டி முடித்தவுடன் இறக்கி வைத்து, மீதமுள்ள நெய்யில் முந்திரி, திராட்சை, பொடி செய்யப்பட்ட ஏலக்காய் ஆகிய இவற்றை வறுத்து கேசரியுடன் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். இதோ இப்போது சுவையான சேமியா கேசரி தயார். திருப்தியாக உண்டு மகிழவும். -

Comments