பலாப்பழ பாயசம்


பலாப்பழ பாயசம் - பாயாசத்தின் ராஜா
தேவையான பொருள்கள்: பெரிய பலாப்பழ சுளைகள் 9 துருவிய தேங்காய் 2 பெரிய கரண்டி தூளான வெல்லம் முக்கால் ஆழாக்கு தூளான ஏலக்காய் அரை ஸ்பூன் நெய் 2 ஸ்பூன் (வழிய, வழிய) தண்ணீர் தேவையான அளவு செய்முறை: முதலில் பலாப் பழத்தின் சுளைகளை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். துருவிய தேங்காயை மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு வெண்ணெய் போல அரைத்துக் கொண்டு உடன் ஒரு பாத்திரத்தில் வைத்துப் பால் பிழிய வேண்டும். இதே மாதிரி மூன்று முறை தேங்காய்ப் பாலை எடுத்துக் கொண்டு மூன்று பாத்திரங்களில் தனித்தனியே முதல் முறை பிழிந்தது, இரண்டாம் முறை பிழிந்தது, மூன்றாம் முறை பிழிந்தது என்ற கணக்கில் தனித்தனியாக வைக்கவும் (சுமார் அரை ஆழாக்கு விதத்தில் வர வேண்டும்). பிறகு ஒரு பாத்திரத்தில் நெய்யை விட்டு அதில் பலாப்பழத் துண்டுகளைப் போட்டு வதக்கி, 5 நிமிடங்கள் கழித்து, பின்னர் மூன்றாம் முறையில் கிடைத்த தேங்காய்ப் பாலை விட்டு, அது நன்றாக கொதித்த மாத்திரத்தில் வெந்த பழத்துடன், வெல்லத் தூளையும் போட வேண்டும். போட்டு நன்றாகக் கிண்ட வேண்டும். இப்போது வெல்லம் நன்கு கரைந்து சுமார் பத்து நிமிடங்கள் நன்கு கொதித்தவுடன் இரண்டாம் முறை பிழிந்த பாலையும் சேர்த்து நன்கு கிண்டவும். பிறகு மீண்டும் நன்கு கொதிக்க வைக்கவும். அத்துடன் பொங்காமல் கிண்டவும். அது ஒரு கொதி வந்த மாத்திரத்தில் கீழே இறக்கி முதல் முறைப் பிழிந்த பாலையும் சேர்த்து ஏலத் தூளையும் உடன் சேர்த்துக் கிண்ட வேண்டும். பின்னர் வாசனை வந்தவுடன் இறக்கவும். இதோ இப்போது சுவையான பழாப் பழ பாயசம் தயார். கப்பில் சுடச் சுட பரிமாறவும். பலாப்பழத்தில் வைட்டமின்களும், பிற சத்துப் பொருட்களும் கணிசமாக இருப்பதால், உடல் வளர்ச்சிக்கும், வலிமை பெறவும் ஒப்பற்ற பழம் பலாப்பழம்.

Comments