ரவை உப்புமா


ரவா உப்புமா - எந்த சமயத்திற்கும் ஏற்றது
தேவையான பொருள்கள்: ரவை 1 ஆழாக்கு கடுகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் காய்ந்த மிளகாய் 1 பச்சை மிளகாய் 2 இஞ்சி 1 சிறிய துண்டு முந்திரிப் பருப்பு 3 உடைத்தது உப்பு தேவையான அளவு செய்முறை: வெறும் வாணலியை காய வைத்து அதில் ரவையை வறுக்கவும். வறுத்த ரவையை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் அரைக் கரண்டி எண்ணெய் விட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்துக் கொண்டு பிறகு இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டு வறுத்த பின்பு இரண்டு ஆழாக்கு தண்ணீரை கொட்டி அரை ஸ்பூன் உப்பையும், கருவேப்பில்லையையும் போடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்கும் சமயத்தில் ரவையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கொண்டே கிளறவும். இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அடிப் பிடிக்காமல் கிளறிப் பக்கங்களில் ஒட்டாமல் வெந்தவுடன் இறக்கி வைக்கவும். வெங்காயம் சேர்க்க வேண்டும் என்றால் பொடிப் பொடியாக நறுக்கி கடுகுடன் சேர்த்து வதக்கி பிறகு நீர் சேர்க்கவும். பின்குறிப்பு : பொதுவாக ரவை நன்கு வேக, நீங்கள் உபயோகிக்கும் ரவையை போல் 2 மடங்கு நீர் சேர்த்தால் நல்லது. ரவை உப்புமாவை சம்பா ரவையை பயன்படுத்தியும் செய்யலாம். அப்படி சம்பா ரவையாக இருந்தால் முதலில் வறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் சில குறிப்புகள்:- வெஜிடபிள் உப்புமா : இதையும் ரவை உப்புமா போலத் தான் கிளற வேண்டும். வெங்காயம், கோஸ், காரட், தக்காளிப் பழம் போன்ற காய் கறிகளை நறுக்கிக் கொண்டு எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, இஞ்சி ,மிளகாய் இவற்றை எல்லாம் நன்கு பொன்னிறம் வரும் வரையில் வறுத்துப் பின்பு முதலில் காய்கறிகளைப் போட்டு ஒரு முறை வதக்கி பின்பு 1 ஆழாக்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். காய் கறிகள் நன்றாக வெந்த மாத்திரத்தில் உப்பு போட்டு, ரவை சேர்த்து 2 ஸ்பூன் நெய் விட்டுக் கிளற வேண்டும். சேமியா உப்புமா: இதற்கு ரவை உப்பு மாவிற்கு சொன்ன அதே சாமான்கள் தான். ஆனால் ரவைக்கு பதில் சேமியாவை பயன்படுத்த வேண்டும். சேமியா என்பதால், ரவை உப்புமாவிற்குத் தேவையான எண்ணெய்யை விடக் குறைவாக இருந்தால் போதும். எண்ணெய்யை காய வைத்து மிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, இவற்றை வறுத்துக் கொண்டு, முந்திரியையும் போட்டு வறுத்து இஞ்சி, பச்சை மிளகாய்யைப் போட்டு, சிறிது வதக்கி பின்னர் நன்கு உதிர்ந்த சேமியாவை போட்டு, சிவப்பாக ஆன பின்னர், தயாராக வைத்து இருக்கும் 1 ஆழாக்கு தண்ணீரை கொட்டி, உப்பு சேர்த்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும். அதே போல பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ருசிப் பிரியர்கள் தேவைப்பட்டால் வெங்காயம் சேர்க்கலாம். -

Comments